அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாணைையில் முறைகேடு.. உயர்நீதிமன்றம் அதிரடி.

ஆகஸ்டு,10-

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். எனவே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

இது பற்றி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்து உள்ள உத்தரவு விவரம் வருமாறு..

கடந்த ஆண்டு ஏப்ரல் 26- ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், பொன்முடிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து முடிப்பதற்காக மே மாத விடுமுறையில் சிறப்பு அமர்வாக விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டபோது, அதை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது

மேலும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை விழுப்புரம் நீதிமன்றம் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டு இருக்கிறது.

இதன் பின்னர் விழுப்புரம் மாவட்ட நிர்வாக நீதிபதியாக இருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை வேலூருக்கு மாற்றுவது குறித்து தலைமை நீதிபதிக்கு குறிப்பு அனுப்பி உள்ளார். இதனை ஏற்று, தலைமை நீதிபதி ஒப்புதலுடன் வழக்கு 2022-ஆம் ஆண்டு ஜூலை 16- ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இந்த வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டதாக வேலூர் நீதிமன்ற நீதிபதி தரப்பிலிருந்து, தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 23- ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதன் பிறகு  நான்கு நாட்களில், 172 சாட்சியங்கள், 381 ஆவணங்களை ஆய்வு செய்து, ஜூன் 28- ஆம் தேதி 226 பக்கங்களை கொண்ட தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி  அடுத்த 2 நாட்களில் ஓய்வு பெற்றுவிட்டார்.

குற்ற விசாரணை நடைமுறையை திரிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியதும் பிறகு கூறப்பட்ட  தீர்ப்பும், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்து உள்ளது. எனவே  இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு  உள்ளேன்.

வழக்கை விரைந்து விசாரிக்க அனுமதி கோரிய விழுப்புரம் நீதிபதி அந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று இந்த வழக்கில்  தடைவிதிக்கப்பட்டது கேள்விப்படாத ஒன்றாக உள்ளது.  விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடியக்கூடிய தருவாயில் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது தீவிர சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே இந்த வழக்கில் நீதி பரிபாலனம் தவறியதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.

இவ்வாறு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தெரிவித்து இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறை, பொன்முடிக்கு ஆகியோருக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் பொன்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாணை மீண்டும் நடைபெறும் என்று தெரிகிறது.

000

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *