தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருந்துவரும் டி.சி.எஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முடிவடைந்த நிதியாண்டின் (FY23) நான்காம் காலாண்டில் 11,391 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
டி.சி.எஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.10,846 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,926 கோடியாக இருந்தபோது நிகர லாபம் 14.8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 59,162 கோடிக்கு எதிராக ரூ. 59,329 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூ.50,591 கோடியிலிருந்து 16.9 சதவீதம் அதிகம்.
இருப்பினும், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் கருத்துக்கணிப்பின்படி, டி.சி.எஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ.11,550 எனத் தெரிவித்துள்ளது.
மேலும், டி.சி.எஸ் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கான டிவிடெண்ட் தொகை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் நிதியாண்டிற்கான இறுதி டிவிடெண்ட் தொகையாக ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.24 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த காலாண்டு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலை 0.87% உயர்ந்து ரூ.3,242.10 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து, பங்கின் விலை 0.99% உயர்ந்து ரூ.3,245.50 ஆக உள்ளது.
இதனிடையே, வரும் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக கே.கிருத்திவாசன் பதவியேற்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.