ஜுலை,25-
நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பாஜகவுக்கு எதிராக ‘ இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.
இதனால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.’இந்தியா’ அணியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. வெவ்வேறு தளங்களில் இதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன.
இந்த அணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இழுக்க அவரது அண்ணன் மகன் அஜித்பவார் மூலம் பேரம் பேசப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறிய அஜித்பவாருக்கு , மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் மூலமாக சரத்பவாரிடம் நடந்த பேரம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த திகைப்பான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே ,பாராமதி தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். அந்த மக்களவை தொகுதிக்குள் வரும் பாரமதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அஜித்பவார். மக்களவை தேர்தலில் அஜித்பவார் ஆசி இல்லாமல் சுப்ரியா ஜெயிப்பது இயலாத காரியம்.சுப்ரியாவை மையமாக வைத்தே சரத்பவாரை வளைத்துள்ளார், அஜித்.
‘காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி வந்தால் சரத்பவார் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவராக நீடிக்கலாம். எனது பரிபூரண ஆதரவு உண்டு. பாராமதியில் சுப்ரியாவை நான் ஜெயிக்க வைக்கிறேன். அவருக்கு மத்தியில் காபினெட் அமைச்சர் பதவி தரப்படும் அதற்கு நான் கேரண்டி.’ என அஜித்பவார் உறுதி அளித்தார். இதனை சரத்பவார் ஏற்றுக்கொண்டார்.
ஏன்?
சரத்பவார் கட்சி நடத்துவதே மகளை அரசியலில் வளர்த்து விடுவதற்குத்தான்.மகள் சுப்ரியாவின் எதிர்காலத்துக்கு அஜித் உறுதி அளித்தது, சரத்தின் மனமாற்றத்துக்கு முதல் காரணம். சரத்பவாருக்கு வயதாகி விட்டது. கட்சியிலும் மக்களிடமும் செல்வாக்குள்ள அஜித்தை எதிர்த்து, இந்த வயதில் தன்னால் அரசியல் செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையை சீனியர் பவார், உணர்ந்து கொண்டது, இரண்டாவது காரணம்.
சரத்பவார், பாஜக அணியில் இணையும் அறிவிப்பு விரைவில் வரும். அவரை தங்கள் பக்கம் கொண்டு வந்து சேர்த்த அஜித்பவாருக்கு சூப்பர் பரிசை வழங்கப்போகிறது,பாஜக மேலிடம்
என்ன பரிசு?
மகாராஷ்டிர முதல்வர் நாற்காலியை வழங்க பாஜக மேலிடம் தயாராகி விட்டது.
ஆச்சர்யப்பட வேண்டாம். காத்திருங்கள். சரத்பவாரை முதல்வராக பார்த்திடலாம் என்கிறது மும்பை தகவல்.
000