ஜுலை, 25-
“சர்ச்சை நாயகன்” அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடு்த்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றுக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது.
கடந்த மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது. இதனை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.
இவர்களில் நீதிபதி நிஷா பானு, மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தார்.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த 3- வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்பதாகக் கூறினார். மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தீர்மானிக்க வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
இதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதால், இந்த வழக்கில் சொல்வதற்கு ஏதுமில்லை என்று தெரிவித்தார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றக் காவல் குறித்து முடிவு செய்யவே மூன்றாவது நீதிபதி, வழக்கை இந்த அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்ததாகவும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை விசாரணை நடத்த அனுமதிப்பதுக் குறித்து தீர்மானிக்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறி, மேகலாவின் மனுவை முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்.
இதனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்பதை இனி உச்சநீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்,
000