2021 ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.இயக்குநர் கேப்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்கள் அடங்கிய குழு விருதுக்கான பட்டியலை தேர்வு செய்தது. தமிழ் சினிமாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விருதுகளே கிடைத்துள்ளன.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.நடிகைகள் அலியா பட், கிருத்தி சோனன் ஆகிய இருவருக்கும் சிறந்த நடிகைக்கான விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.சிறந்த படத்துக்கான தேசிய விருது, நடிகர் மாதவன் இயக்கி நடித்து, இந்தியில் வெளியான ‘ராக்கெட்ரி:நம்பி எபெக்ட்’ படத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது, ஆர்.ஆர்.ஆர்.படத்துக்கு கிடைத்துள்ளது.
தமிழில் சிறப்பு விருதுக்கான பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாநில மொழிப் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுக்கு ‘கடைசி விவசாயி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் என 5 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருந்தது. ‘சிவரஞ்சனியும், சில பெண்களும்’ திரைப்படம் 3 பிரிவுகளில் விருதை வென்றிருந்தது. மண்டேலா 2 பிரிவுகளில் விருது வென்றது. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்திருந்தன.
2021-ஆண்டில் நல்ல படைப்புகள் தமிழில் வந்தபோதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேசிய விருது கிடைத்திருப்பது தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’, சூர்யாவின் ‘ஜெய்பீம்’, மாரிசெல்வராஜின் ‘கர்ணன்’ உள்ளிட்ட வை அமோக வரவேற்பை பெற்ற தமிழ் படங்கள்.இந்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் கிடைக்கவில்லை.
மொத்தத்தில் தமிழ் ரசிகர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு ஏமாற்றதையே அளித்துள்ளது.
-பாரதி.