The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படத்திற்கான தடை நீக்கம்… உச்சநீதிமன்றம் அதிரடி!

May 19,2023

தி கேரளா ஸ்டோரி படத்திற்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்கவும் தமிழகம் மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதிப்டோ சென் இயக்கியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விபுல்ஷா தயாரித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இந்து பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வந்தது. படத்தை பார்த்த பிரதமர் மோடி படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட எதிர்ப்பு எழுந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இருப்பினும் இந்தப் படத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் சில திரையரங்குகள் முன்பு போராட்டங்கள் நடைபெற்றதால் திரையரங்குகள் படத்தை திரையிடுவதை நிறுத்தின. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிவித்தது.

இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் படம் திரையிடும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *