புதுடெல்லி,
இந்தியா பாதுகாப்பு படையான முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது. 17½ வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ராணுவம், விமானப்படை, கடற்படை என மும்படையில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய எடுக்கப்பட்ட இந்த அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனாலும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் வேலையில் விமானப்படை, ராணுவம், கடற்படை என மும்படைகளும் களமிறங்கின.
இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
தேச நலனுக்காகவும், பாதுகாப்பு படையை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி கோர்ட்டு இந்த திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து அது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது.