June 12, 23
“அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அற்றவர்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நேற்று தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “தமிழ்நாட்டிலிருந்து இருவர் பிரதமராகும் வாய்ப்பை திமுக தடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரு தமிழரை பிரதமராக்குவதே தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் ” தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி தான். இந்திய, உலக அரசியலை தெரிந்தவர், விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக கூடிய தகுதி உள்ளவர்” என தெரிவித்தார்.
தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டு ஊழல்கள் குறித்து பேசும் போது “முன்னாள் முதல்வர்கள் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசியலை ஊழலை நீக்கி விட்டு பார்க்க முடியாது. தமிழ்நாடு வளராததற்கு ஊழல்தான் காரணம் என தெரிவித்திருந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ” தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வைத்தால் கூட அதிமுக 30 தொகுதிகளில் வெற்றி பெறும்; கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற அதிமுகதான் காரணம். அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்; அண்ணாமலை மீது ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஒரு ஆலமரம். ஆனால் பாஜக வெறும் செடிதான்.” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாவது..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அற்றவர். உண்மையை உணராமல் மனம் போன போக்கில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வரும் காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவை தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை தான் நினைவுபடுத்துகிறது.” ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.