அண்ணாமலை ஒரு நாள் இந்தியாவுக்கான தலைவராக வருவாரம்,, எப்படி என்று ராஜ்நாத் சிங் விளக்கம்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக உள்ள அண்ணாமலையை மத்திய பாதுகாப்பு அமைச்சரும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவருமான ராஜ்நாத் சிங் வானளவா புகழ்ந்து அவரை உச்சிக் குளிரச் செய்துள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்து பேசியதே அண்ணாமலைக்கு கிடைத்த பெரிய மகுடமாக கருதப்பட்டு வரும் நேரத்தில் இப்போது ராஜ்நாத் சிங்கும் அவரை மனம் விட்டுப் பாராட்டி இருக்கிறார்.

சென்னை அடுத்த தாம்பரத்தில் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் அண்ணாமலையை வைத்துக் கொண்டு ராஜ்நாத் சிங் பேசியது வருமாறு..

ராஜராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகள் படையை திறமையாக கையாண்டவர்கள். அவர்களின் பூமியில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

தமிழகம் திருவள்ளுவர் போன்ற அறிஞர்களை கொண்ட பூமி. தமிழ் உலகின் பழமையான மொழி. திருக்குறளின் சிறந்த கருத்துகள் தான் பிரதமர்  மோடி அரசு முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டுகிறது. தொன்மையான தமிழ் மொழி எனக்கு தெரியாததால் எனது தாய்மொழியான இந்தியில் உங்கள் முன் பேசுகிறேன்.

தமிழகத்திற்கு மட்டுமே தெரிந்த செங்கோல் என்ற வார்த்தை இந்தியா முழுமைக்கும் தற்போது  தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததன் மூலம்  தமிழகத்தின் பெருமைக்கான புதிய வரலாறு எழுதப்பட்டுள்ள்து.

அலைபேசிக்கான இணையக் கட்டணம் உலகில் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது. 80 சதவீத அலைபேசி பயன்பாட்டாளர்கள் இணைய இணைப்பை பயன்படுத்துகின்றனர்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மத்திய அரசு கொடுக்கும் 100 ரூபாய் பணத்தில்  14.15 ரூபாய்தான் மக்களுக்கு கிடைப்பதாக கூறினார். மோடி ஆட்சியில் டெல்லியில் இருந்து கொடுக்கப்படும் 100 ரூபாயும் மக்களின் கைகளுக்குச் செல்கிறது.

உங்கள் முன் முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறேன் ,  தமிழகத்தில் உள்ள அரசு எந்தளவு ஊழல் செய்கிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்திருக்கிறது  ஒரே ஒரு முறை தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள் , ஊழலற்ற ஆட்சியை உங்களுக்கு தருகிறோம். பாஐக ஆட்சியில் ஊழல் நடந்தால் அவர்கள் இருக்கும் இடம் அரசு கட்டில் அல்ல, சிறைச் சாலையாகத்தான்  இருக்கும் .

பாஜக தமிழ் மக்கள் , தமிழ்மொழி , தமிழ் கலாசாரம் மீது  உயர்ந்த மதிப்பை கொண்டுள்ளது. அதனால்தான் தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.இந்த ஆலைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 4 ஆயிரம் கோடிக்கான உற்பத்தி தொடங்கிவிட்டது. ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை தமிழகத்தில் மேற்கொள்ளுமாறு பலரையும் வலியுறுத்தி வருகிறேன்.

உக்ரைன் – ரஷ்ய இடையேயானப் போரை நான்கரை மணி நேரம் நிறுத்தி வைத்து இந்திய மாணவர்களை மீட்டு வந்தவர் பிரதமர் மோடி. இப்படியான சாதனைகளைச் செய்யும் பிரதமரை , தமிழக  முதலமைச்சர் ,  எனது நண்பர் ஸ்டாலின் ஏதேனும் ஒருவகையில் குற்றம் குறை சொல்கிறார்.

அரசியல் காழ்ப்புணர்வால் செந்தில் பாலாஜியை கைது செய்து விட்டோம் என்கிறார் முதல்வர். அவர் இதே செந்தில்பாலாஜி மீது பக்கம் பக்கமாக கடந்த ஆட்சி காலத்தில்  குற்றப் பத்திரிகை படித்தார், கைது செய்ய சொன்னார் . ஆனால் தற்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். எதை வேண்டுமானாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இரட்டை வேடம் போடுவதை ஒப்புக் கொள்ள முடியாது.

தமிழகத்தில் நேர்முக அரசியல் செய்யவே நாங்கள்  நினைக்கிறோம். ஸ்டாலின் என்பது ரஷ்யா சர்வாதிகாரியின் பெயர் , அந்த பெயரை கொண்ட தமிழக முதலமைச்சர்  பாஜகவினர் மீது பழிவாக்கும் நடவடிக்கை எடுக்க கூடாது.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். கூட்டணி தர்மப்படி எப்போதும்  கூட்டணிக் கட்சிகளுக்கு மரியாதையும் அங்கீகாரத்தையும்  தருவதற்குத் தயாராக இருக்கிறோம். வாஜ்பாய் ஆட்சியமைக்க காரணமாக இருந்தவர் அதிமுக தலைவர்  ஜெயலலிதா. ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த அவர் மீது பாஜகவிற்கு மிகுந்த மரியாதை உள்ளது.

அண்ணாமலை தமிழகத்திற்கு மட்டுமான தலைவர் அல்ல, மொத்த இந்தியாவிற்குமான தலைவராக அண்ணாமலை வருவார். அண்ணாமலையின் வேகம் , செயல்முறைக்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.”

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசிவிட்டுச் சென்றார்.

பாஜகவின் முன்னணி தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக அண்ணாமலையை புகழந்துப் பேசுவது அவரின் ஆற்றலால் அல்ல, அவரை ஒரு முன்னணி தலைவராக உருவாக்கி அதன் மூலம் பாரதீ யஜனதாக்  கட்சியை வளர்க்கலாம் என்ற நோக்கத்தில் தான்  என்ற கருத்து வலை தளங்களில் பகிரப்படுகிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *