ஆதி புருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், பாரதீய ஜனதா, சிவசேனாஆகிய கட்சிகள் வலியுறுத்தி உள்ளன, மக்கள் கேட்டுக்கொண்டால் படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட்டு உள்ளனர்.
படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் சரியில்லை என்பது படத்தின் மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டாகும். பிரபாஸ் மீசை வைத்துக் கொண்டு ராமர் வேடத்தில் நடித்துள்ளதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. புராண பாத்திரங்களை இருளில் நடமாட விட்டு இருப்பது அவர்களை அவமதிப்பது போன்று உள்ளது என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும்.
ஆதிபுருஷில் இதிகாச அவதாரமான சீதாவை இந்தியாவின் மகள் என்று அழைக்கும் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு அண்டை நாடான நேபாளத்தில் கடுமையான எதிர்ப்பு மூன்டுள்ளது. சீதா தங்கள் நாட்டின் ஜானக் புரியில் பிறந்தவர் என்பது எங்கள் நம்பிக்கை. அதற்கு எதிராக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று காத்மண்டுவில் போர்க்குரல்கள் எழுந்து உள்ளன. இதை அடுத்து சீதா இந்தியாவின் மகள் என்ற வசனங்களை நீக்கிவிட்டு நேபாளத்தில் திரையிட்டு உள்ளனர்.
இப்படிப் பட்டச் சூழலில் தான் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவிலும் எழுந்து உள்ளன. டெல்லியில் பேட்டி அளித்த பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பிரவின் சங்கர் கபூர், படத்தில் குறிப்பாக அனுமானுக்காக எழுதப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை வலியுறுத்தி உள்ளார். அது மட்டுமின்றி படத்திற்கு வழங்கப்பட்டு உள்ள தணிக்கை சான்றிதழை ரத்து செய்து படத்தை நிறுத்துவது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் கபூர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா, புராண பாத்திரங்கள் கொச்சையான மொழியில் பேசுவது போன்று படத்தில் வரும் உரையாடல்கள் அபத்தமாக இருப்பதாகச் சாடி உள்ளார். முன்பு ராமானந்த் சாகர் தயாரித்த ராமாயணத் தொடருடன் ஆதி புருஷை ஒப்பிடக் கூடாது என்பதும் அவருடைய கருத்தாகும்.
சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, படத்தில் அனுமானுக்காக எழுதப்பட்டு உள்ள வசனங்களுக்காக படக்குழு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனத்தைப் பெற்று உள்ள ஆதி புருஷுக்கு மற்ற மாநிலங்களை விட சத்தீஷ்கர் மாநிலத்தில் கடுமையான எதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ராய்ப்பூரில் அளித்துள்ள பேட்டியில் ராமர் மற்றும் அனுமாரை இழிவுப்படுத்தும் முயற்சியாகத்தான் ஆதி புருஷ் படம் உள்ளது என்றார். பொது மக்கள் கோரிக்கை வைத்தால் படத்தை சத்தீஸ்கர் மாநிலத்தில் தடை செய்வது பற்றி அரசு பரிசீலிக்கும் என்றும் பாகேஸ் தெரிவித்து உள்ளார்.
கடுமையான எதிர்ப்புகள், விமர்சனங்கள் இடையே ஆதி புருஷ் திரைப்படம் நாட்டின் மற்ற இடங்களை விட தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.