அமுதா ஐஏஎஸ் கையில் உள்துறை… தாறுமாறா எகிறி கிடக்கும் க்ரைம் ரேட்…. டாஸ்க் ரொம்ப டஃப் தானாம்!

May 15,2023

முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக ஆட்சியில் பல்வேறு க்ரைம் சம்பவங்கள் நடந்துள்ளன. நாகை முபாரக் கொலை முதல் நெல்லை மாரியப்பன் கொலை வரை லிஸ்ட் பெரிதாக காணப்படுகிறது. இதுதவிர லாக்கப் டார்ச்சர், பல் பிடுங்கி சித்ரவதை செய்த பல்வீர் சிங் ஐபிஎஸ் என அதிகாரிகள் மட்டத்திலும் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் (Amudha IAS) நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிகவும் சிக்கலான நேரத்தில் பொறுப்பேற்றுள்ள இவர், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், அடக்கி ஒடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

அமுதா ஐஏஎஸ்… இவரை பற்றி கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இவரது பின்னணி என்ன தெரியுமா? என விளக்கவுரை அளிப்பது ஆகட்டும், இவருக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு காத்திருக்கிறது எனக் கூறுவது ஆகட்டும். இப்படி பேசுபொருளாக ஆனது மட்டுமின்றி, பெரும் எதிர்பார்ப்பையும் விதைத்துள்ளார். அதற்கு காரணம் தமிழக அரசு பிறப்பித்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு. மொத்தம் 14 பேர் மாற்றப்பட்ட நிலையில், அதில் இவரும் ஒருவர்.

ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை என்றாலே சட்டம் ஒழுங்கு விஷயம் தான் நினைவுக்கு வரும். இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமெனில் காவல்துறை இதன் கட்டுப்பாட்டின் கீழ் தான் வருகிறது. எனவே தமிழகத்தில் க்ரைம் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றச் செயல்களுக்கு விரைவாக தீர்வு கண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டியதும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் அமுதா ஐஏஎஸ் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. ஏற்கனவே இருந்த பணீந்திர ரெட்டி சரியாக வேலை செய்யவில்லையா எனக் கேட்கலாம்? அப்படி சொல்லிவிட முடியாது. ஆனால் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது சட்டம் ஒழுங்கு விஷயத்தில் தமிழக அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. தமிழகத்தின் க்ரைம் ரேட் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் பெரிய லிஸ்டே முன்வந்து நிற்கும்.

நாகை மாவட்ட முபாரக் கொலை, கள்ளக்குறிச்சி ராஜா கொடூர கொலை, வாணியம்பாடி வசீக் அக்ரம் வெட்டிக் கொலை, சேலம் காட்டுராஜா மற்றும் அவரது மனைவி எரித்து கொலை, நெல்லை சங்கரசுப்பிரமணியன் தலை துண்டித்து கொலை, நெல்லை மாரியப்பன் கொலை, கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணத்தை அடுத்து நடந்த கலவரம், வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த ஆதிக்க சாதியினரின் அத்துமீறலில் இதுவரை குற்றவாளிகள் சிக்காதது, சென்னையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் மர்ம மரணம் என க்ரைம் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தை பெரிதும் உலுக்கியது. கடந்த ஆண்டு சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் வெறும் 25 நாட்களில் 19 கொலைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. திருச்சி சிவா, அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல் விஷயத்தில் போலீசார் மீது சிறிதும் பயமின்றி ஆளுங்கட்சியினர் நடந்து கொண்டனர்.

இதுதவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி போதை பொருளை கைப்பற்றி அதை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. சில வட மாவட்டங்களில் ரவுடிகளின் ஆதிக்கம் புது சர்ச்சையாகி இருக்கிறது.

சமீபத்தில் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 5க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தையும் ஒடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. காவல்துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். இவற்றை எல்லாம் அமுதா ஐஏஎஸ் எப்படி கையாளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *