ஹைதராபாத்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், தெலங்கானா நீதிபதியின் மகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இறந்த பெண்ணின் உடலை ஹைதராபாத் கொண்டு வர தெலங்கானா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வரும் டி.நர்ஸி ரெட்டியின் மகள் ஐஸ்வர்யா (27). இவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018- ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தார். பிறகு மேற்படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகருக்குச் சென் றார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் டெக்சாஸில் இருக்கும் இவர், அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
மர்ம நபர் சுட்டுக் கொலை: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஐஸ்வர்யா தனது நண்பருடன் அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்றார். அங்கு உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார். அதில் ஐஸ்வர்யா உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் போலீஸாரால் கொல்லப்பட்டார். இதுகுறித்து டெக்சாஸ் நகர போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஸ்வர்யா கடந்த சனிக்கிழமை வணிக வளாகம் செல்வதற்கு முன் ஹைதராபாத்தில் உள்ள தனது தாயார் அருணாவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ஆண் நண்பர் ஒருவருடன் வணிக வளாகத்துக்கு செல்லவிருப்பது பற்றி கூறியுள்ளார். சில மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாக அவரது தாயார் கூறினார்.
அதன் பிறகே அமெரிக்காவில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஐஸ்வர்யா தனது சகோதரர் ஸ்ரீகாந்தின் திருமணத்திற்கு தெலங்கானா வந்துள்ளார்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை: ஐஸ்வர்யாவின் உடலை விரைந்து ஹைதராபாத் கொண்டுவருவதற்கு தெலங்கானா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தெலங்கானா அரசின் கோரிக்கையின் பேரில் இந்திய வெளியுறவு அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவின் உடல் நாளை (புதன்கிழமை) தாயகம் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது உறவினர் ராம்ரெட்டி கூறினார்.