அமைச்சர் செந்தில்பாலாஜி கைது! – வழக்கின் பின்னணி என்ன?

June 14, 23

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவதற்கு காரணமான போக்குவரத்துத்துறை பணி நியமன வழக்கின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்..

2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணத்தில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மற்றும் உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் செந்தில்பாலாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளக்கோரி ஆணை பிறப்பித்தது.

மேலும் இந்த முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கவும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்ச விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்ககோரி அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது. போக்குவரத்துறையில் வேலை வழங்க பணம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *