தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள், நோயாளி என அனைத்துத் தரப்பினரும் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவரவேண்டும் என்று அப்போது அவர் கூறினார். கொரோனா பரவல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுகிறது எனவும் தெரிவித்தார். அதன்படி, இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாய முகக்கவசம் அணியும் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.