மே.26
தமிழக முதலமைச்சர் 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
சென்னையில் 2024 ஜனவரியில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று ஜப்பான் புறப்பட்டுச்சென்றார்.
ஜப்பானின் கான்சாய் விமான நிலையத்தில், அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மு.க.ஸ்டாலினுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை (மே.26, 27) ஆகிய இரு நாட்கள் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.