June 01, 2023
யூனியின் பிரதேச பணியிட மாற்றம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க போவதில்லை என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் பணியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார். இதுவரை மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரையும் கெஜ்ரிவால் விரைவில் சந்திக்க உள்ளார். இந்நிலையில், இந்நிலையில் அவசர சட்ட விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க மாட்டேன் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறுகையில், 370வது சட்டப்பிரிவு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை ஆதரித்தது ஏன்?. இப்போது ஏன் அழுகிறார்?. நான் கெஜ்ரிவாலை ஆதரிக்கப்போவதில்லை, ஏனென்றால் அவர் மென்மையான இந்துத்துவாவை மட்டுமல்ல, தீவிரமான இந்துத்துவாவையும் பின்பற்றுகிறார் என்று தெரிவித்தார்.
2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், ஜம்மு காஷ்மீர் மீதான அரசாங்கத்தின் முடிவுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். இமு மாநிலத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பதிவு செய்து இருந்தார்.