தமிழகத்தில் வருவாய்த்துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடதுகரை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
மேலும், பதிவுபெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு கிராமங்களில் குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டு மனைகளாக வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், நிலச் சீர்திருத்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் பொருட்டு திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ்கள் இனி இணைய வழியில் வழங்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.