தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கி இருப்பதாக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், அதில், திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துவதாக தெரிவித்து இருந்தார். திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அடையாளமும், முகவரியும் கிடைக்கும் என்று திமுக மீது அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்; இதைக் கண்டு என்றுதான் நாம் அஞ்சியிருக்கிறோம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருப்பதாகவும், இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.