மே.8
ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுக எதிர்கட்சிகள் பேசுவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. அவர்கள் அப்படிதான் பேசுவார்கள். அப்படித்தான் பேச வேண்டும். ஆனால் அரசின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் ஏன் எதிரிக்கட்சிபோல் செயல்படவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்த நோக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டார். மாநில அமைதியை குலைக்க வந்துள்ளாரா? தமிழ்நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்கத்தான் அவரை அனுப்பியுள்ளார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது எனவும் அவர் அப்போது கூறினார். ஆளுநர் அண்மையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் என்னிடம் அன்பாக உள்ளார். நானும் அன்பாகத்தான் உள்ளேன் என்று தெரிவித்துள்ளா. ஆளுநர் இப்படி என்னை பாராட்டி விட்டார் என்பதற்காக கொள்கைகளை நான் ஒருபோதும் விட்டுத்தரமாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சி செய்யக்கூடிய கர்நாடகம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கலவரம் நிகழ்கிறதா? கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட கலவரத்தை ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தினோம். கலவரங்கள் இல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் செல்வதைக் கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது என்றும் அவர் சாடினார்.மேலும், ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றும், இந்தியா முழுவதற்கும் திராவிட மாடலைக் கொண்டு செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.