அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு சரிவர ஊதியமும் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பத்தூர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட சிறார்கள், குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்று தெரிவித்துள்ளார்.
ஆவின் பண்ணை தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலை இல்லை என்றாலும் ஆவின் பண்ணையில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் யாருமே பணி புரியவில்லை என்று கூறியுள்ளார். ஆவின் என்பது அரசு பொதுத்துறை நிறுவனம் என்றும் இங்கு பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருமே, நிர்ணயித்திருக்கக் கூடிய ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள், அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், அவர்களுக்கு பி.எஃப், இ எஸ் ஐ போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.