ஜனவரி -23,
மலைப் பகுதியான ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற இடங்களில் இரவுப் பொழுதில் சராசாரியாக 5 டிகரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இந்த இரண்டு நகரங்களிலும் பகல் நேர வெப்பம் கூட 20 டிகிரி செல்சியஸ்சை தாண்டவில்லை.
மாலை ஆறு மணியாகிவிட்டால் இரண்டு நகரங்களிலும் வெப்பம் தாங்கும் உடைகள் இல்லாமல் அறையை விட்டு வெளியில் வரமுடிவதில்லை.
இன்னொரு மலை நகரமான கோடைக்கானலில் பகல் நேர வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸை தாண்டுவதில்லை, அதிகாலை பொழுதில் பத்து டிகிரி வெப்பம் நிலவுகிறது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிலும் ஏறக்குறைய இதே வெப்ப நிலைதான். ஏரியில் ஜிலு ஜிலு காற்றில் படகில் பயணம் செய்வதும் சுகமாக உள்ளது. கைகளை மார்பில் போர்த்திக் கொண்டு காபி தோட்டங்கள் இடைய நடப்பதும் இதமான அனுபவந்தான்.
நம்ம ஊரில் சுற்றுலா என்றாலும் மலைப் பிரதேசங்களுக்கு செல்வது என்றாலும் ஏப்ரல், மே, ஜுன் மாதங்கள் தான் நினைவுக்கு வரும். அது எல்லாம் சென்னை போன்ற நகரங்களில் சுட்டு எரிக்கும் வெயிலுக்கு இதமான சூழலைத் தேடிப் போகிறப் பயணங்கள்.
இப்போது இந்த மலை நகரங்களுக்குச் சென்றால் அதிக பட்ச குளிரை உணரமுடிகிறது. அப்படி ஒரு அனுபவம் இதற்கு முன் உங்களுக்கு கிடைத்திருக்காது.
காலையில் எழுந்து வெளியில் வந்தால் பனித் துளிகள் சொட்டு சொட்டாக சொட்டுவதைக் கவனிப்பதும் இன்பாக இருக்கிறது.
பெய்து முடிந்த பருவ மழையால் செடிகளும் மரங்களும் பச்சை பசேல் என்று காட்சி தருகின்றன. கோடை காலத்தை விட குறைவான வாடகைக்கு அறைக் கிடைக்கிறது. கொடைக்கானல் ஆகட்டும் உதக மண்டலம் ஆகட்டும் இப்போது நெரிசலும் குறைவாக இருக்கிறது, எனவே மலை நகரங்களுக்குச் செல்வதற்கு இது உகந்த மாதம்.
இன்னொன்று தமிழ்நாட்டில் பிப்ரவரி முடிந்து மார்ச் மாதம் பிறந்துவிட்டாலே வெயில் கொளுத்த ஆரம்பித்து விடும், பகல் பொழுது என்றால் வியர்வையில் தான் குளிக்கவேண்டும்.
இப்போது என்றால் எங்கும் இதமான சூழல் நிலவுகிறது. சாலை ஒரங்களும் பச்சையாக காட்சி தருகின்றன. கண்களுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது
வாருங்கள் மலை நகரங்களுக்குச் சென்று வரலாம்.
*