இந்திய மருந்துகளால் இலங்கையில் உயிரிழப்பு.. இறக்குமதிக்கு எதிர்ப்பு வலுக்கிறது..,

இந்தியாவின் மருந்துகளை எடு்த்துக் கொள்ளும் நோயாளிகள் நோயில் இருந்து குணமடைவதற்குப் பதில் இறந்து விடும் செய்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கண்டி மாவட்டத்தில், பேராதனை போதனா வைத்தியசாலையில், இந்திய தயாரிப்பான புபிவாகைன் என்ற மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி கண்டி மாவட்ட  மக்களிடையே கவலையைத் தூண்டியது, இரண்டு மாதங்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இந்திய மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தகவல் பரவியிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மருந்தை பயன்படுத்துவதற்கு இலங்கை சுகாதார அமைச்சகம் தடை விதித்துவிட்டது.

இந்த சம்பவங்களுக்கு முன்னதாகவே, பதிவு செய்யப்படாத  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை வாங்குவதற்கு இலங்கை அமைச்சரவை மற்றும் சுகாதார அதிகாரிகள் எடுத்த முடிவை எதிர்த்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

 

அத்தியாவசிய மருந்துகள் அதிகம் தேவைப்படுவதால் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடம் இருந்தும் இறக்குமதி செய்து கொள்வதற்கு இலங்கையின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்து உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சாவோரைட் ஃபார்மாசூட்டிகல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சென்னையைச் சேர்ந்த கவுசிக் தெரபியூட்டிக்ஸ் ஆகியவை அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளன.

ஏப்ரல் தொடக்கத்தில் வழக்கை எடுத்துக் கொண்ட இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த இரண்டு இந்திய நிறுவனங்களின் இறக்குமதியை நிறுத்தி வைத்தது.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள நுவரெலியா பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் கடந்த மே மாதம் கண் அறுவை சிகிச்சைக் செய்துகொண்ட  10 நோயாளிகளுக்கு இந்திய மருந்துகளை வழங்கினர்கள். அவர்களுக்கு  பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.  கண் மருந்தில் உள்ள கிருமிகள் தான் நோயாளிகளுக்குப் பார்வைக் குறைபாடு ஏற்படக்  காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே விசாரணையைத் தொடங்கிய சுகாதார அதிகாரிகள்  மருத்துவமனைகளில் இருந்து அந்த மருந்தை திரும்பப் பெற்றனர்.

இது போன்று அடுத்தடுத்து நடை பெறும் நிகழ்வுகளை அடுத்து இந்திய மருந்துகளை கடுமையாக சோதித்தப் பிறகு பயன்படுத்து மாறு  இலங்கை மருத்துவர்களை அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இந்திய இருமல் மருந்துகளை உட்க்கொண்ட குழந்தைகள் முன்பு உயிரிழந்தனர். இதையடுத்து அந்த மருந்துகளை ஏற்றுமதி செய்த இந்திய மருந்து நிறுவனங்கள் சர்ச்சைக்கு ஆளாகின.  அதன் பிறகு கடந்த மாதம் இந்திய அரசு, குறிப்பிட்ட சோதணை மையங்களின் பெயர்களை வெளியிட்டு அங்கு மருந்துகளை ஆய்வு செய்து சான்றிதழ் பெற்ற பின்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இலங்கையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறைவு. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளைதான் பயன்படுத்துகின்றனர்.  அவற்றில் பாதி அளவு மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை ஆகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை , இந்தியாவிடம் இருந்து கடனாகப் பெறும் தொகையில் இந்த அத்தியாவசிய மருத்துவப் பொருட்களும் அடக்கமாகும்.

இநத் சூழலில் கடந்த வாரம் இலங்கை மருத்துவமனையில் பதிவான மரணம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.

சின்னஞ்சிறு நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை அனுப்பி உயிர்ப்பலி வாங்கும் இந்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

000

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *