May 25,2023
நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். இந்த கடுமையான வெயிலால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் உட்பட ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர் உள்பட வட மாநிலங்களிலும் வெயில் கொளுத்தியது.
அக்னிநட்சத்திரம் காரணமாக தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாள்தோறும் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி வருகிறது. வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் இனி வரும் நாட்களில் வெப்ப நிலை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரணம், நாடு முழுவதும் வீசி வந்த வெப்ப அலை இன்றுடன் நிடைவடைவதால் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் மெல்ல மெல்ல குறையும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் இனி மழை பெய்யும் என்றும் வெப்பநிலை குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை ஓய்ந்ததால் மலைப்பகுதியை ஒட்டிய 6 மாநிலங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்ப அலை இன்றுடன் ஓய்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருப்பது மக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. இதனால் வரும் நாட்களில் கொளுத்தும் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.