அண்ணாமலை இரண்டு திரைப்படங்களை வெளியிடப்போகிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ். பாஜக இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தொடர்ந்து தனது குமுறலை கொட்டி வருகிறார் மருது அழகுராஜ்.
அவர், புத்தாண்டும் புதுப்படமும் என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது: தமிழ் புத்தாண்டு திருநாளாகிய ஏப்ரல் 14-ல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பா.ஜ.க. தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை “இரண்டரை லட்சம் கோடி” மற்றும் “ரஃபேல் வாட்ச்” என்கிற இரண்டு திரைப்படங்களை வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதனை ஆன்லைனில் வெளியிடுவதற்கு பதிலாக சி.பி.ஐ. வருமானவரித்துறை அமலாக்கப்பிரிவு போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளிலேயே வெளியிடலாமே.. நோக்கம் வெற்று அரசியலாக இல்லாமல் நடவடிக்கைகள் சார்ந்து அவற்றை முன்னெடுப்பது தான் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் கடமையாக இருக்க வேண்டும்… என்கிறார்.
அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்சுக்கு பில் எங்கே? என்று கேட்டு வருகிறார்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், திமுகவினர். ஏப்ரல் -14ம் தேதி பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக அந்த பில்லை வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சொத்துகுவிப்பு பட்டியலையும் அன்றைய தினம் வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.