ஆகஸ்ட், 04-
ஜெர்மனியில் இருந்து இரண்டு வயது அரிஹா ஷாவை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த வேண்டுகோளை அடு்த்து இந்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
அரிஹாவின் தாயார் தாரா ஷா, இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் எம்.பி.க்களை சந்தித்து உதவி கேட்டு இருந்தார். ஜெர்மனியில் அந்த நாட்டு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள தமது மகளை இந்தியாவில் உள்ள ஒரு வளர்ப்பு இல்லத்திற்கு மாற்றுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவரின் வேண்டு கோள் ஆகும்.
அரிஹா யார் ?
இந்தியாவை சேர்ந்த பாவேஷ் ஷா – தாரா ஷா தம்பதியினர் அரிஹா என்ற தங்களது பெண்குழந்தையுடன் ஜெர்மனியில் வசித்த வந்தனர். அந்த குழந்தையை 7 மாதங்கள் வரை பாசத்துடன் வளர்த்து வந்த தம்பதிக்கு ஒரு நாள் பிரச்சினை ஏற்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரிஹாவின் பிறப்புறுப்பில் இரத்தம் இருந்ததைக் கண்டு பாவேஷ், தாரா தம்பதியினர் அந்தக் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டனர்.
மறுநாள் மீண்டும் அதே இடத்தில் ரத்தம் வழிந்ததால், குழந்தையை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தினார்.
அரிஹாவை ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவளை பிரிந்திருக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை பாவேஷ் மற்றும் தாரா தம்பதியினர் அப்போது அறிந்திருக்கவில்லை.
அரிஹா பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர் அந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிவித்தார். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கும் அவர் தகவல் அளித்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஜெர்மனி நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புக் குழு, அந்த குழந்தையை பெற்றோரிடம் இருந்து பறிமுதல் செய்து பெர்லின் நகரில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பியது.
இதையடுத்து குழந்தையை மீட்பதற்கு பல கட்டப் போரட்டங்களை பாவேஷா, தாரா தம்பதியினர் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லி வந்து அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் சந்திது தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது பாவேஷ் கூறியதாவது..
“ஒரு பெற்றோர் தங்களது ஏழு மாத மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவார்களா? அரிஹாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே, எங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தாய்நாட்டைப் பிரிந்து வெகு தொலைவில் வசித்து வரும் நிலையில், இது போன்ற பிரச்சினை எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ஜெர்மானிய மொழி தெரியாத நாங்கள் அந்த நாட்டு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். இதனால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை எங்களுக்கு உதவி செய்வதற்கு அமர்த்திக் கொண்டோம்.
அந்த மொழி பெயர்ப்பாளர் மூலம், ஜெர்மன் அதிகாரிகளிடம், எங்களது பிரச்சினைகளை தெளிவாகப் புரியவைத்தோம், ஆனால், அதற்குப் பின்னும் அரிஹாவை எங்கள் வீட்டுக்கு அழைத்துவர முடியவில்லை.
இதன் பின்னர் ஜெர்மன் அதிகாரிகள் எங்கள் இரண்டு பேர் மீதும் புகார் அளித்தனர். இந்த புகார் மீதான வழக்கில் அரசு வழக்கறிஞர் மூலம் எங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தோம்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்த நீதிமன்றம், அரிஹா எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக வில்லை என்று அறிக்கை கொடுத்தது. இதனால் நிம்மதி அடைந்தோம். எங்கள் குழந்தை எங்களுக்கு கிடைத்து விடும் என்று காத்திருந்தோம். அதற்குள் அரிஹாவுக்கு ஒரு வயதாகியிருந்தது. ஆனால் குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இவ்வாறு பாவேஷ் கூறியிருந்தார்.
இதனைக் கேட்டு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் 59 பேர் கையெழுத்துப் போட்டு மனு ஒன்றை இந்திய வெளியுறவுத் துறைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மனுவை அடுத்து டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அதிகாரிகள் நேற்று விசாரித்தார்கள்.
அப்போது இந்திய அதிகாரிகள், பாவேஷா-தாரா தம்பதியின் கவலையை தெரிவித்தனர். அதற்கு ஜெர்மன் தூதர் தரப்பில் “அரிஹா ஜெயின் சமூகத்தை சேர்ந்தவள் என்பதால் காப்பகத்தில் சைவ உணவுதான் தரப்படுகிறது. மேலும் இரு நாட்டு சட்டங்களை பரிசீலித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இருந்தாலும் அரிஹா இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவாளா என்பதற்கான உத்தரவாம் எதுவும் ஜெர்மன் தூதர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
சில மாதங்கள் முன்பு ஓ.டி.டி. தளத்தில் ‘மிஸ்டர்ஸ், சாட்டார்ஜி’ என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் நார்வே நாட்டில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் இரண்டு குழந்தைகளை அந்த நாட்டு அதிகாரிகள் ஒரு நாள் எடுத்துச் சென்று விடுவார்கள். குழந்தைகளை மீட்பதற்கு தாய் நடத்தும் போராட்டந்தான் அந்த படத்தின் கதை. அதே போன்று உள்ளது அரிஹாவை மீட்க பெற்றேர்கள் நடத்தும் போராட்டம்.
00