ஜுலை, 04- கிராமங்களில் நிகழ்வதாக திரைப்படங்களில் காட்டப்படும் சில விநோத காட்சிகள், நிஜமாகவே சில கிராமங்களில் நடப்பதாக கேள்விப்படும் போது அதிசயித்துப் போகிறோம்.
கிழக்கே போகும் ரயில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உதாரணம். நாட்கணக்கில் கொட்டும் மழையை நிறுத்த, கன்னிப்பெண் ஒருத்தி உடைகள் ஏதுமின்றி கிராமத்தை வலம் வருவாள்.
ஏற்காட்டில் உள்ள மலைக்கிராமத்தில், பெண்கள் நிர்வாண பூஜை செய்வதாக அதன் பின்னரே செய்திகள் வந்தன. அட ..அப்படியா?’ என வியந்தோம்.
வறுமையில் இருந்து தன்னை மீட்டெடுக்க சுகன்யா மொய் விருந்து நடத்துவதாய் ‘சின்னகவுண்டர்’படத்தில் காட்டப்படும் காட்சியும் நிஜமாகவே தஞ்சை ,புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நடப்பதாய் பின்னர் தெரிந்து கொண்டோம்.
ஆனி,ஆடி, ஆவணி மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி பகுதியில் மொய் விருந்துகள் அமர்க்களப்படும். இப்போது ஆனி மாதம் என்பதால் அங்கே மொய் விருந்துகளும் ஆரம்பமாகி விட்டன.
ஏன் இந்த விருந்து?
சுருக்கமாக பார்க்கலாம்.
பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள ஒருவர், அதிலிருந்து விடுபட மொய் விருந்து நடத்துவார்.ஆட்டுகிடா கறி பரிமாறப்படும். சாப்பாட்டை ஒரு கை பார்க்கும் உறவுகள், விருந்து வைப்பவருக்கு தங்களால் முடிந்த தொகையை மொய் வைப்பார்கள்.
அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அவர், விவசாயம் அல்லது வேறு தொழிலில் முதலீடு செய்து வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். மொய் விருந்தில் பெற்ற பணத்தை அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொய் செய்தவர்களுக்கு திருப்பி செலுத்துவார்கள். ஏற்கனவே மொய் அளித்தவர்கள் தனியாகவோ அல்லது மற்றவர்களை சேர்த்துக்கொண்டோ, தடபுடலாக மொய் விருந்து நிகழ்வை நடத்துவர்.
போட்ட பணம்’ அவர்களுக்கு வட்டியோடு திரும்பக்கிடைத்து விடும். அதாவது அவர் செய்த தொகையை விட, கூடுதலாக மொய் எழுதுவார்கள். இவ்வாறு மொய் விருந்து நடத்துவோருக்கு தகுதிக்கு ஏற்றபடி 5 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
சுருங்க சொன்னால், வங்கியில் இருந்து கடன் வாங்குவது போன்றதே இந்த மொய் விருந்து கலாச்சாரம். மொய் விருந்து நடத்தும் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் மொய் விருந்து நடத்தலாம்.
இப்போதெல்லாம் கிராமங்களில் பலர் கூட்டாக மொய் விருந்து நடத்துகிறார்கள்,இதனால் செலவு குறைகிறது. அண்மைக்காலமாக மொய் செய்வர்களுக்கு , விருந்து வைப்போர் ரசீது வழங்குகின்றனர்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் சென்னை போன்ற நகரங்களில் பெரிய திருமண மண்டபத்தை பிடியுங்கள். நல்ல பசை உள்ள ஆட்களாக கூப்பிட்டு விருந்து பரிமாறுங்கள். தேவைப்பட்ட பணம் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.
000