திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் கிழங்குகள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பீட்ரூட், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பீட்ரூட்டை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளிவிட்டு விவசாயிகள் இதனை பயிரிடுகின்றனர்.
இந்த பீட்ரூட் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுவதால் அதை அதிகளவில் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இது குறித்துப் பேசிய விவசாயி, குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும், குளிர்காலத்தில் மகசூல் அதிகமாகவும் கிடைக்கும்.
ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோ சராசரியாக ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வியாபாரிகள் தோட்டங்களுக்குள் நேரடியாக வந்து அறுவடை செய்து, கிழங்குகளை கழுவி சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச் செல்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பீட்ரூட் ரூ.5 முதல் ரூ. 7 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.