ஜனவரி-10,
பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று தினங்கள் முன்பு வடலூரில் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியாரை மிகவும் தரம் தாழ்ந்து செய்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல் வேறு கட்சிகளும் அவருடைய பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
மேலும் தமிழ்நாட்டில் பல் வேறு காவல் நிலையங்களிலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் மதுரையில் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் “சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் ” என்று வாதிடப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, “தந்தை பெரியார் பற்றிய சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சீமான் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்/. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் ஜனவரி 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றம் பச்சைக் கொடிக் காட்டி உள்ளதை அடுத்து சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதுப் பற்றியும் சீமான் தரப்பில் யோசிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தமக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக கவலைப்பட்டு உள்ள சீமான், மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே பெரியாரை பற்றி பேசி சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். எனவே போலீஸ் கைது செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதால் சீமான் கைது ஆகி சிறைக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது” என்பது அரசியல் நடுநிலையாளர்கள் கருத்தாக உள்ளது.
*