விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிர்வாகிகள் மீது உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தூக்கியடித்து, கோபத்தில் அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, திமுக தலைமை கழகத்தின் மூலமாக புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களே பூத்கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, அந்த படிவத்தை தூக்கி அவர்களது முகத்திலேயே எரிந்து ஆவேசமாக பேசினார். இதனால் நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் புதிதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கூறிவிட்டு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதியில் நீர்மோர் பந்தலை திறந்துவிட்டு அமைச்சர் பொன்முடி அங்கிருந்து பாதியிலே சென்றார். அமைச்சரின் இந்த நடவடிக்கையால் திருக்கோயிலூர் தொகுதி திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.