எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் இதோ போன்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பெயரும் பதியப்பட்டு இருக்கிறது. இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது.
இது பற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது . அப்படி பயன்படுத்தினால் அது போர்ஜரி. அதற்காக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் டெல்லியில் 18 – ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கோடநாடு கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாட்டத் தலைநகரங்களில் ஆகஸ்டு முதல் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர் செல்வம் காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பற்றிய கேள்விக்கு ஜெயக்குமார் “கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசுதான்.வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது கொரோனா பரவியதால் நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்கு விசாரணை தடைப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை நடந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இப்போது திமுக அரசு கோடநாடு வழக்கை விசாரிக்கிறது. அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.
முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
000