ஜுலை,25-
எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். “இந்தியன் முஜாஹிதீன்”, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” போன்ற அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால் பெயரால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை என்று மோடி தெரிவித்து இருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி.”இதுபோன்ற திசையற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார். இதனை முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
2024 நாடளுமன்றத் தேர்தல் பற்றி விவாதிக்க கடந்த வாரம் பெங்களூரில் நடந்த 26 கட்சிகளின் கூட்டத்தில் இந்தியா என்ற பேரில் அதாவாது “இந்திய தேசிய வளர்ச்சி” என்ற அமைப்பின் பேரில் செயல்பட முடிவு செய்யப்பட்டது
எம்.பி.க்கள் கூட்டத்தில் இதனை கடுமையாக விமர்சனம் செய்த மோடி “இந்திய தேசிய காங்கிரஸ். கிழக்கிந்திய நிறுவனம். இந்தியன் முஜாகிதீன். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – இவையும் இந்தியா தான். இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதில் ஒன்றும் அர்த்தமில்லை” என்றார்.
நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த முடியாது, என்றும் பிரதம் பேசினார்.
மணிப்பூர் கலவரம் மற்றும் மேலும் அங்கு இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அணிவகுப்பு நடத்திய வீடியோ போன்ற விவகாரங்களில் பிரதமர் மோடிஅறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி “தோல்வி, சோர்வு, நம்பிக்கையற்ற தன்மை போன்றவற்றின் தொகுப்புதான் எதிர்க்கட்சிகள். அவர்களின் நடத்தைதான் அவர்களை எதிர்க்கட்சியாக இருக்க வைத்துள்ளது” என்றும் கூறினார்.
மோடியின் பேச்சுக்கு சூடான பதிலை எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பான இந்தியாவும் தயாரித்து வருகிறதாம்.
000