ஜுலை,18-
இன்னும் 10 மாதங்களில் நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒரு வழியாக ஒருங்கிணைந்து விட்டன.
எல்லா பெருமைகளும் பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமாரையே சேரும். அவர்தான் பிள்ளையார் சுழி போட்டார்.ஊர், ஊராக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.’மோடியை வீழ்த்துவோம்’ என அழைத்தார். ‘எதிர்க்கட்சிகளாவது.. ஒன்று சேர்வதாவது?’என பாஜக மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் நகைத்தன.
ஆனால் , அதிசயம் நடந்தே விட்டது.
பீகாரில் நிதிஷ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த 2 நாள் கூட்டத்தில் 26 கட்சிகள் இணைந்துள்ளன.
நேற்று (திங்கள்) தொடங்கிய கூட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் சோனியா விருந்து அளித்தார். இரண்டாம் நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளை களைந்து பொது செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்,மற்றும் திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக,, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, முஸ்லிம் லீக் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்..
சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் , ஸ்டாலின்.மம்தா பானர்ஜி,அரவிந்த் கெஜ்ரிவால், சித்தராமய்யா,லாலு பிரசாத் யாதவ்,அகிலேஷ் யாதவ், சரத்பவார்,உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் 11 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA – INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதாவது இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி என்பது இதன் விளக்கமாகும்.
கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கார்கே இதனை தெரிவித்தார். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைபுக் குழு ஒன்றும் உருவாக்கப்படும். இந்தக் குழுவில் பங்கேற்ப்பவர்கள் யார், யார் என்பது மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “இது இரண்டு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியாக இருக்காது. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கும். இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் நடக்கும் யுத்தமாக இருக்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.
பிரதமராக இருந்த தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ,இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. கர்நாடகத்தில் ஓரளவு வலிமையாக இருக்கும் அந்த கட்சி, டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் அழைக்கப்படவில்லை . யாரும் தங்களை அழைக்க வில்லை என்ற தமது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளர் குமாரசாமி.