எம்ஜிஆருக்குப் பதில் டூப் போட்டு படத்தை முடித்த மாடர்ன் தியேட்டர்ஸ்

தென்னிந்திய சினிமாக்களின் தலைநகரமாக சென்னை விளங்கிய நேரத்தில், இங்கிருந்து பல நூறு மைல் தொலைவில் ,ஒரு சினிமா ஸ்டூடியோ வெற்றிகரமாக இயங்கியது என்பதை நம்ப முடிகிறதா ?

செயல்பட்டது. அது மட்டுமின்றி,, ஏராளமான திரைப்படங்களையும்,தனது ஸ்டூடியோவிலேயே தயாரித்தது.
அது. ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’.

சேலத்தில் ஏற்காடு மலையின் அடிவாரத்தில் ,இயற்கை எழில் சூழ்ந்த பரந்த வெளியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது, அந்த ஸ்டூடியோ.
படப்பிடிப்பு தளங்கள் மட்டுமில்லாமல்,ஒலி –ஒளி , டப்பிங்,எடிட்டிங், புராசசிங் போன்ற அனைத்து வசதிகளும் அங்கே இருந்தன.
இதனை நிர்மானித்தவர் டி.ஆர்.சுந்தரம். பிரிட்டனில் படித்தவர்.

பிரிட்டிஷ்காரர்களின் பாணியை பின்பற்றிய சுந்தரம், கண்டிப்பானவரும் கூட.

டெக்னீஷியன்கள் மட்டுமில்லாமல், ஹீரோக்களுக்கும் இவரை கண்டால் , உதறல் எடுக்கும்.’எல்லோரும் ஓர் குலம்’ என்பது,இவர் , தன் வாழ்நாளின் இறுதிவரை கடை பிடித்த கொள்கை. எடுபிடி வேலை செய்பவர் முதல் ஹீரோக்கள் வரை அனைவருக்கும் ஒரே சாப்பாடுதான்.

20 ஆண்டுகாலம் கோடம்பாக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் , எம்.ஜி.ஆர்.எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், காமெடியனாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்.கேட்கும் போது, கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பது அப்போது எழுதப்படாத விதியாக இருந்தது.
அவரது கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர், இந்த சுந்தரம்.

சினிமா தயாரிப்பில் , முழு மூச்சாக இறங்கி இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் , அப்போது தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த அனைவரையும் வைத்து படங்கள் தயாரித்தது.
அவர்களில் எம் ஜி ஆரும் அடக்கம். அந்த நிறுவனம் உருவாக்கிய ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க, எம் ஜி ஆரிடம் கால்ஷீட் இல்லை. மாடர்ன் தியேட்டர்சார் காத்துக்கொண்டே இருந்தார்கள்.
எம் ஜி ஆர் தேதி தருவதாக தெரியவில்லை. அவருக்கு பதிலாக ஒரு ‘டூப்’பை பயன்படுத்தி , கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து , படத்தை முடித்து விட்டார், சுந்தரம்.

தமிழகத்தை தளமாக கொண்டு செயல்பட்ட சினிமா நிறுவனங்களில், அதிக படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமாகத்தான் இருக்கும் .165 சினிமாக்களை தயாரித்தனர்..

இப்போது, அந்த ஸ்டூடியோ இல்லை.இடித்து விட்டார்கள். குடி இருப்பு வளாகமாக உருமாறியுள்ளது.மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ஆலமரம் இருந்ததற்கான அடையாளமாக ,ஒரு ஆர்ச்’ மட்டும் அங்கே உள்ளது.

தயாரித்த முக்கிய சினிமாக்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ். 1937 ஆம் ஆண்டு தனது முதல் படமான `சதிஅகல்யா’வைத் தயாரித்தது. பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய தவமணி தேவிதான் இந்தப்படத்தின் கதாநாயகி.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘மந்திரி குமாரி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் கருணாநிதி, எம். ஜி.ஆர் என இருவர் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது.
அந்தப்படத்தில் ,கதாநாயகனாக நடித்தவர், எம்.ஜி.ஆர்.
தமிழில் முழுநீள வண்ண படத்தைத் தயாரிக்க முடிவு செய்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற அரபு கதையை தேர்வு செய்தது. எம்.ஜி.ஆர்.ஹீரோ. அந்த படம் சக்கைப்போடு போட்டது.

‘வல்லவனுக்கு வல்லவன்’, இரு ‘வல்லவர்கள்’, ‘வல்லவன் ஒருவன்’ போன்ற படங்களும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களே. இந்தப் படங்களின் மூலம் தமிழக ஜேம்ஸ் பாண்ட் என்று புகழ்பெற்றார் ஜெய்சங்கர்.

—–

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *