ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ம் தேதி ஈரோடு வரவுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெரியசேமூரில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி பேசினார். அதில், எல்.பி.பி கால்வாய் நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, திட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் விவசாயிகள் குழுக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
இந்த திட்டத்திற்கு திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அது குறித்தும் விவசாயிகளுடன் பேசப்படும் என்றார். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 15ம் தேதி மாலை 2 மணி நேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துச்சாமி, கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அன்றைய தினம் அரசு விழா அல்லது விளையாட்டு உள்கட்டமைப்பை ஆய்வு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் 1 கோடி புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், இதனால் அதிமுகவை விட கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை திமுகவில் 2 கோடியாக அதிகமாக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.