June 12, 23
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பாகாநாகா பஜார் ரயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாகாநாகா பஜார் ரெயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மொஹந்தி, பாலோசோர் சிக்னல் பொறுப்பாளர் மஹந்தா, பொறியாளர் அமீர்கான், தொழில்நுட்ப நிபுணர்கள் பப்பு யாதவ், அபினாஷ் மொஹந்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.