ஆகஸ்டு,31-
மற்ற பண்டிகைகளை காட்டிலும் தமிழகத்தில் தீபாவளிக்குத்தான் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். அதுபோல் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, சரக்கு விற்பனை தூள் பறக்கும்.
தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான வாணிப கழகம் மது விற்பது போல் அந்த மாநிலத்தில் கேரள அரசின் மதுபான கழகம் மூலம் அரசாங்கமே மது விற்பனை செய்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை யொட்டி கடந்த 11 நாட்களில் 770 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்று தீர்ந்துள்ளது.இதன் மூலம் கடந்த ஆண்டின் ‘சாதனை’ முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பெருமிதம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளே விற்றன.இப்போது கடந்த ஆண்டை விட 70 கோடி ரூபாய் அதிகம்.
இந்த ஆண்டு ஓணத்தை யொட்டி 11 நாட்களும் மதுக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. புதிய சினிமா படத்தை பார்ப்பதற்கு தியேட்டரில் நிற்பது போன்று எல்லா மதுக்கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. மது விற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்துள்ளதால் அரசாங்கம் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் மதுபான கடையில் வேலை பார்ப்போர் நொந்து நூலாகிப்போனார்கள்.
‘’ஓணம் பண்டிகையை யொட்டி மதுபான கடைகளில் கூட்டம் அலை மோதும். வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்க கூடாது. அவர்கள் சவுரியமாக மது வாங்கி செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்’ என ஒவ்வொரு மதுபான கடைக்கும் சர்க்குலர் அனுப்பபட்டது. இதனால் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடமுடியாமல் அரசாங்கம் மீது ஆத்திரம் அடைந்தனர், மதுபான கடை ஊழியர்கள்.
000