ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்… மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் வாதம்

June 08, 23

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியுள்ளது.

கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அ.தி.மு.க சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அந்த வாதத்தில், ‘கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல. ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தாக கூறினாலும் கூட, அவர்களை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ.வாக செயல்படுவதில் எப்படிப்பட்ட பாதிப்பை ஓ.பன்னீர் செல்வம் உள்ளீட்ட மனுதாரர்களுக்கு ஏற்படுத்தியது என்பது குறித்து விளக்கப்படவில்லை.

மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓ.பன்னீர் செல்வம் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும் எனத் தெரியவில்லை. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியில் 2,500 பேர் கொண்ட பொதுக்குழு எப்படி ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கலாம் என்ற வாதத்தை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் செயல்பாட்டால் கட்சி செயல்பாடு முடங்கி விட்டது என்ற வாதம் கற்பானையானதல்ல; உச்ச நீதிமன்றமே அதை ஏற்றுக் கொண்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தவறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஏற்கனவே தனி நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *