June 14, 23
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார்.
அவர் அனுமதிக்கப்பட்டபோது உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அது தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இசிஜி-யில் மாறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது.தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் செந்தில்பாலாஜியின் உடல்நிலை ரயில்வே மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையை சுற்றி சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை தேவைப்படுவதை முன்னிறுத்தி ஜாமீன் கோர அவரது தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கைது செய்யப்படும்போதே அவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.