ஏப்ரல்.20
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
கர்நாடகாவில் வரும் மே 25ஆம் தேதி உடன் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 5,21,73,579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 58,282 வாக்குச்சாவடிகள் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் 2018-19ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை வாக்காளர்கள் 9.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம். கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிரம் காட்டுவதால் கர்நாடக சட்டமன்றத் தேர்தலி மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், பாஜக 222 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 216 இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, இறுதிவேட்பாளர் பட்டியல் வரும் 24ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மே 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், ஒடிசாவின் ஜர்சுகுடா, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சான்பே மற்றும் சூவர், மேகாலயாவில் சோயியாங் ஆகிய 5 தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, மே.13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.