ஏப்ரல்.24
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதிவேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 21-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டது.
வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிரூந்த நிலையில், போட்டியில் இருந்து விலக விரும்புகிறவர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் தங்களின் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
காங்கிரஸ், பாஜகவில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதால், அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், போட்டி வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற வைக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். இதனால், இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதிப்பட்டியில் இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.