ஏப்ரல் 19
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக கூட்டணியில் இடம் ஒதுக்குமாறு எடியூரப்பாவை சந்தித்து கடிதம் வழங்கினர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 10 நாள்களில் தேர்தல் ஆணையம் முடுவெடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது.
வெள்ளிக் கிழமையுடன் கெடு முடியும் நிலையில் இன்று இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உள்ளது.
இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், “தேர்தல் ஆணையத்தின் முடிவு தெரிந்த பின்னர், கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.