ஜனவரி-17,
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் துப்பாக்கி முனையில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
மங்களூரு அருகே உல்லாவ் என்ற இடத்தில் செயல்பட்டுவரும் கோட்டேகர் என்ற கூட்டுறவு வங்கியில் இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. கார் ஒன்றில் வந்த ஐந்து முகமூடிக் கொள்ளையர்கள் காலை 11 மணியளவில் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஊழியர்களை மிரட்டி அலமாரிகளை திறக்கச் சொல்லி உள்ளனர். உடனே அதில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகளை அள்ளிப் பைக்குள் போட்டுக் கொண்டு தங்களின் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
கொள்ளையர்களின் வயது 25 முதல் 35 வரை இருக்கும். அவர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தி மற்றும் கன்னடத்தில் பேசி இருக்கின்றனர். போகிறப் போக்கில் வங்கி ஊழியர் ஒருவரின் விரலில் இருந்த மோதிரத்தையும் பறித்துச் சென்றுவிட்டதாக மங்களூரு காவல் துறை ஆணையர் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
தகவல் கிடைத்த உடன் வந்த போலீஸ்காரர்கள் மோப்ப நாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
இதே கர்நாடகா மாநிலத்தின் பிதார் நகரத்தில் நேற்று ஏடிஎம்- க்கு நிரப்புவதற்கு கொண்டுவரப்பட்ட ரூ 93 லட்சத்தை கொள்ளையர்கள் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு பறித்துச் சென்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், மங்களூரு அருகே வங்கியில் இன்று நடைபெற்று உள்ள கொள்ளை கர்நாடகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
*