May 13,2023
கர்நாடாகா தேர்தல் முன்னிலை விவரங்கள் வெளியான நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரின் பேச்சு ஒரே நாளில் மாறியுள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்றும் காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ ஆட்சியமைக்க வேண்டும் என்றால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவு வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பகல் 12 மணி நேர நிலவரப்படி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கர்நாடகா முழுவதும் செல்வாக்கு உள்ள கட்சி அல்ல. பழைய மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே அக்கட்சி ஆதிக்கம் செலுத்தும். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் ஒரு கட்சி பெரும்பாண்மை பெற 113 இடங்களில் வென்றாக வேண்டும். ஆனால் மஜதவோ இதுவரை ஒரு தேர்தலில் அதிகபட்சமாக கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கையே 58 தான்.
ஆனால் அக்கட்சி தலைவர் குமாரசாமி இரு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இரு முறை துணை முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்து வந்த மஜத இம்முறையும் அவ்வாறு பவனி வரும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறின. 35 இடங்கள் வரை அக்கட்சி வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. இதனால் நேற்றே குமாரசாமி “எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு தான் ஆதரவளிப்போம்” என்று அறிவித்தார்.
ஆனால் தற்போது வந்துள்ள முன்னிலை விவரங்களில் அக்கட்சிக்கு 23 இடங்கள் கிடைக்கவே வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி 130 இடங்கள் வரை முன்னிலை வகிக்கும் நிலையில் பாஜக 64 இடங்களிலும், மஜத 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளை பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாங்கள் எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. எங்களை இதுவரை எந்த கட்சியும் தொடர்பு கொண்டு பேசவில்லை” என்று கூறியுள்ளார். ஒரே நாளில் காட்சிகள் மாறிய நிலையில் குமாரசாமி தனது குரலை குறைத்துக் கொண்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.