கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அனைத்து துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்கி ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்தார். நண்பகல் 12 மணிக்கு மைசூரு வந்த அவர், டி.நர்சிபுராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். பின்னர் சாம்ராஜ்நகரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டிலும், மாலையில் மைசூருவில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றார்.
முன்னதாக, டி.நர்சிப்புராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு எந்த வளர்ச்சித் திட்டமும் மேற்கொள்ளவில்லை. அடிப்படை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பாஜக ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்து அரசு திட்டங்களிலும் 40 சதவீத கமிஷன் லஞ்சமாக வாங்கப்பட்டுள்ளது. இதற்காக சந்தோஷ் பாட்டீல் போன்ற ஒப்பந்ததாரர்கள் உயிரி ழந்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் ரூ. 1.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வளவு பணத்தை பாஜகவினர் கொள்ளையடித்து இருப்பதால் கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இந்தப் பணத்தில் 100 எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம். 2,250 கி.மீ. விரைவு சாலையை உருவாக்கி இருக்கலாம். கிராமப்புறத்தில் முன்னேற்ற வேலைகளை பார்த்திருக்கலாம். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.