MAy13,2023
“காங்கிரஸ் அலுவலகம் எங்களின் கோயில். அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம்.” – டி.கே.சிவகுமார்
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போதைய நிலவரப்படி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பா.ஜ.க 70-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. முழுமையான முடிவுகள் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் 120 இடங்களை நிச்சயமாக காங்கிரஸ் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸின் தோழமைக் கட்சிகள் பலவும் காங்கிரஸுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியினரும் ஆரவாரமாகப் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இன்னொருபக்கம் பா.ஜ.க தரப்பினர், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், இந்த முடிவுகளை லோக்சபா தேர்தலில் மீண்டெழ எடுத்துக்கொள்வதாகவும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக கங்கிராஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கர்நாடக மக்களுக்கும், கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க பேட்டியளித்தியிருக்கிறார்.
பேட்டியின்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், “கர்நாடகாவைக் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு நான் உறுதியளித்திருந்தேன். இப்போது நிறைவேற்றிவிட்டேன். நான் சிறையிலிருந்தபோது சோனியா காந்தி என்னைச் சந்திக்க வந்ததை என்னால் மறக்க முடியாது.
காங்கிரஸ் அலுவலகம் எங்களின் கோயில். அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம். மேலும், சித்தராமையா உட்பட மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
முன்னதாக, ஹவாலா பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினர் அளித்த புகாரின்படி 2018-ம் ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத்துறையால் சிவகுமார் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.