மே.31
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் மரணமடைந்தது தொடர்பாக தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென அவரது தாயார் செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து அந்தப் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக மே 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை சிபிசிஐடியால் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையின் நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனு அளித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையில்லை என்று தெரிவித்தார்.
மேலும், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த வழக்கை, தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.