கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியை நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி பார்வையிட்டனர்.
கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் “எங்கள் முதல்வர்-எங்கள் பெருமை” கண்காட்சியை கடந்த 7ஆம் தேதி நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி, இன்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி, முதலமைச்சருடைய உழைப்பு, அவர் கடந்து வந்த பாதை, அனைத்தையும் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியாது.
ஆரம்ப காலத்திலிருந்து தொண்டராக, இளைஞரணி செயலாளராக, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தானே பொது வாழ்க்கையில் அர்ப்பணித்துப் பல கஷ்டங்களை அனுபவித்து இன்றைக்கு அவர் நம்முடைய முதல்வராக வந்துள்ளார். உண்மையில் அவர், பட்ட கஷ்டங்கள், உழைப்புக்கு மக்கள் கொடுத்த அன்பு, வெற்றியைத் தான் பார்க்க வேண்டும். மேலும் இதனைப் பார்க்க ஒரு மணி நேரம் போதாது. முதல்வர் 50ஆண்டுக்கால பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்ததை, அந்த புகைப்படங்கள் பேசுகிறது.
ஒரு வருடம் சிறையிலிருந்த காட்சியைப் பார்க்கும் போது, ஒரு மாதிரி நெகிழ்வாக இருந்தது. ஒரு தலைவன் எப்படி எல்லாம் உருவாகி இருக்கிறார் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். பெருநகரங்களில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது போல, கிராமப் பகுதிகளிலும் இந்த புகைப்பட கண்காட்சி நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.