ஜனவரி-23.
துறவிகளும் சாதுக்களும் நிறைந்த மகா கும்பமேளாவில் பதினாரு வயது பருவ மங்கை ஒருவர் பல இலட்சம் பேரின் கவனத்தை ஈர்த்து கொண்டாடப்படும் பெண்ணாக மாறி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த அழகு ஓவியத்தின் பெயர் மோனலிசா போன்ஸ்லே. இவர் ஒன்றும் சினிமா நட்சத்திரம் அல்ல. மன்னர் குடும்பத்தில தோன்றிய இளவரசியும் கிடையாது. மோனலிசா என்ற பெயருக்கு ஏற்ற அழகி.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோனலிசா, கும்பமேளாவில் வண்ண மாலைகளை விற்பதற்கு அப்பா, அண்ணனுடன் வந்திருந்தார். பெருங்கூட்டத்தின் நடுவில் மாலைகளை கழுத்திலும் கைகளிலும் மாட்டிக் கொண்டு விற்ற போது இவருடைய அழகு அனைவரையும் கெள்ளைக் கொண்டு விட்டது. விடுவார்களா நம்ம ஆட்கள்? அவருடன் செல்பி எடுப்பதற்கு போட்டிப் போட்டு முண்டியடித்துக் கொண்டு திரண்டு விட்டனர்.
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இன்ஸ்டா கிராம் பக்கம் முழுவதும் மோனலிசா போன்ஸ்லே படங்கள்தான்.
நீண்ட மூக்கு, சுண்டி இழுக்கும் பார்வை, காந்தக் கண்கள், கண்களில் தெரிந்த நீல நிறம் என மோன லிசாவை பார்த்தவர்கள் சொக்கிப் போனவர்கள்.
இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடருகிறவர்கள் எண்ணிக்கை கிடு கிடு என்று ஐந்து லடசத்துக்கு எகிறியது.
பிழைப்புக்காக மாலை விற்க வந்த இடத்தில் மோனலிசாவுக்கு கிடைத்த வரவேற்பு அவருடைய அப்பாவையும் அண்ணனையும் திக்கு முக்காடச் செய்துவிட்டது. அவரை கொட்டகைக்குள் மறைத்து வைத்து விட்டு அவர்கள் மட்டும் மாலைகளை விற்பதற்கு வெளியில் போவது என்று முடிவு செய்தார்கள்.
அவரைப் பார்த்து ரசிப்பதற்கு கொட்டகையை சூழ்ந்து கொண்டது பெரும் பட்டாளம். இதற்கு மேல் கும்பமேளாவில் மோனலிசா இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணிய தந்தை, அவரை உடனடியாக வண்டி ஏற்றி இந்தூருக்கு அனுப்பி விட்டார்.
‘
இதன் முத்தாயப்பாக மோனலிசாவை நடிக்க வைப்பதற்கு விரும்புவதாக இந்திப் பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்து உள்ளார். ‘டைரியஸ் மணிப்பூர்’ என்கிற படத்தில் நடிப்பதற்கு அழகான பெண்ணை வெகுநாளாக தேடிக் கொண்டிருந்தேன். இப்போது மோனலிசா கிடைத்து விட்டாா் என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமது 16- வது பிறந்த நாளை கொண்டாடிய மோனலிசாவுக்கு ஐந்து லட்சம் பேர் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
மோனலிசாவை பார்த்த அழகுக் கலை நிபுணர் ஒருவர், அவரை தமது நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேக்கப் போட்டு படம் எடுத்து வெளியிட்டு உள்ளார். மேக்கப் போடாமல் இருக்கும் போதுதான் மோனலிசா அழகாக இருப்பதாக கருத்துகளை பதிவிட்டு உள்ளனர் ரசிகர்கள்.
*