June 19, 23
அரவிந்த் கெஜ்ரிவாலின் அனைத்து தேசிய பயணங்களுக்கும் பஞ்சாப் முதல்வர் ஏற்பாடு செய்து வருகிறார். அவர் முதல்வரா அல்லது பைலட்டா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? என்று முதல்வர் பகவந்த் மானை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கினார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் குர்தாஸ்பூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: மாநில முதல்வருக்கு (பகவந்த் மான்) உள்ள ஒரே பணி, அரவிந்த் கெஜ்ரிவாலை விமானத்தில் சென்னை, கொல்கத்தா அல்லது டெல்லிக்கு அனுப்புவதுதான். அரவிந்த் கெஜ்ரிவாலின் அனைத்து தேசிய பயணங்களுக்கும் பஞ்சாப் முதல்வர் ஏற்பாடு செய்து வருகிறார். அவர் முதல்வரா அல்லது பைலட்டா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை?. அவர் (பகவந்த் மான்) தனது முழு நேரத்தையும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பயணங்களில் செலவிடுகிறார். இது பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு வழிவகுக்கிறது. மக்கள் இங்கு பாதுகாப்பாக இல்லை.
ஒவ்வொரு பெண்ணின் கணக்குகளிலும் மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்வதாக உறுதியளித்தீர்கள். அம்மாக்கள், மகள்கள் அனைவரும் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரூ.1,000 பற்றி என்ன பேசுவது? 1000 பைசா கூட அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படவில்லை. சுரங்க மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவார்கள் ஆம் ஆத்மி கூறியுள்ளது. ஆனால் கிடைத்த தகவலின்படி, ரூ.125 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இது முந்தைய அரசுகள் ஈட்டிய தொகையை விட குறைவாகும். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியாக ரூ.51 ஆயிரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்தது. ஆனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், ஒரு பயனாளிக்கு கூட எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.