கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

June 09, 23

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும். இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியுள்ளது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை கேரளா முழுவதும் பரவலாக பெய்யும் என்றும், மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதற்கேற்ப நேற்று முதல் கேரள மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற ஜூன் 12-ம் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை பொழிவில் பாதிப்பு இருக்காது என்றும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *